Saturday, December 13, 2008

தினம் பல் விளக்குபவர்கள் மட்டும் இதைப் படிங்க இல்லாங்காட்டி போய்க்கினே இருங்க...!!!

தினம் ஆயிரத்து சொச்ச டூத் பேஸ்ட் விளம்பரம் டி.வி ல வருதில்ல...அதப் பார்த்து அதுல வர்ற எதோ ஒரு பேஸ்ட் வாங்கி வீட்ல போட்டுக்கறோம் .இப்ப கேள்வியே ஒரு மாசத்துக்கு நீங்க எத்தினி பேஸ்ட் வாங்கி உங்க பல்ல விளக்கறிங்க? நானும் நிறைய இடத்துல பாத்துபுட்டேன்,
அட என்னா கொடுமைன்னா மாசம் நாலு பேஸ்ட் வாங்கியும் பத்தலையாம் சில வீடுகள்ல?!என்ன தான் பண்றாக ...ஃபேரன் லவ்லிக்கு பதிலா மூஞ்சில தேச்சுக்கறாங்கலோனு பீதியாவுது. இல்லாங்காட்டி டியுப்ள விக்கிற சாக்லேட்டுனு தின்னே தீக்குராங்களோ...? என்ன தான் பண்றாகன்னு research பண்ணிப் பார்த்தாக்க அப்புறம் தெரிஞ்சது சூட்ச்சுமம் !
பேஸ்ட் கம்பெனிக்காரன் விளம்பரம் பார்த்து பேஸ்ட் வாங்கற நம்ம மன்னாரு மொக்கைச் சாமிகள் அதுல இலவசமா தர்ற பிரஷ் நீளத்துக்கு பேஸ்ட்டைப் பிதுக்கி தினம் தேய்க்கிறான் பல்லு .ஆனாலும் நாத்தம் மட்டும் போகல ?!அண்ணன்களே...தம்பிகளே....அக்காக்களே...தங்கச்சிகளே ...பல் விளக்குவான்(அதாங்க பிரஷ்!!!) இருக்குல்ல அதுல சும்மா இத்தனூண்டு பட்டாணி சைஸ் ல பேஸ்ட்டைப் பிதுக்கித் தேச்சா போதும் .பல்லு விளங்கிரும்.இது நான் சொல்லல ...பல் மருத்துவர்கள் சொன்னது.
எல்லாரும் தெரிஞ்சிக்கட்டுமே நு இங்கன கூவினோம்.
அப்புறம் வரட்டுமா...நாளைக்குப் பார்போம்.
எத்தினி பேரு நான் சொன்னத கேட்ருக்காகனு ....

Sunday, December 7, 2008

க்விஸ்...க்விஸ்...க்விஸ்...?!

க்விஸ் ...க்விஸ்...க்விஸ்!!!

அட சுவிஸ் ...இல்லங்க க்விஸ்?!

இப்போ நான் சில கேள்விகள் கேட்பேனாம் ,

அதுக்கு இந்தப் பதிவை யாரெல்லாம் எட்டிப் பார்க்கிராங்களோ அவங்க பதில் போடுவீங்கலாம் பின்னூட்டத்துல.உங்க பொது அறிவை சோதிச்சுப் பர்ர்க்க ஒரு சின்ன வாய்ப்பு தான் ...!!!

போலாமா ரைட்...ரைட் ...ரைட்...

  1. மறைமலை அடிகளாரின் இயற்பெயர் என்ன?
  2. சூரியநாராயண சாஸ்திரிகள் தன் பெயரை எப்படித் தமிழ்ப் படுத்திக் கொண்டார்?
  3. பங்கஜம் இச் சொல்லை எப்படித் தமிழ்ப் படுத்தலாம்?
  4. ரயில் இதன் தூய தமிழ்ப் பெயர் என்ன?
  5. அஞ்சுகம் என்பது எதைக் குறிக்கும்?
  6. வேழம் என்பது எதைக் குறிக்கிறது?
  7. புத்தர் பிறந்த இடம் எது?
  8. தார் பாலைவனம் எங்கு இருக்கிறது ?
  9. பொய்யே சொல்லாத இந்து அரசர் யார்?
  10. கௌடில்யர் எழுதிய நூலின் பெயர் என்ன?

ஓ.கே

இப்போ பதில்களைப் பின்னூட்டத்தில சொல்லிட்டிங்கனா உங்களுக்கு மதிப்பெண் கொடுக்க வசதியா இருக்கும் .

நான் ரெடி ...நீங்க ரெடியா ?

Saturday, December 6, 2008

பெண் மலர் தான் மலிவல்ல...?!

பெண் மலர் தான் மலிவல்ல...
சில்லறை வண்டுகள் ரீங்காரமிடும்போது ,
சில்லிட்டு உறையாமல்
சிக்காமல் மீண்டு எழுந்தால் ;
பெண் மலர் தான் மலிவல்ல...!
ஆப்பிள் தேவதைகள் தான் ...
அழுகிப் போகாமல் காக்கும் வரை ;
சாக்லேட் தேவதைகள் தான் ...
சாக்கடையில் நழுவாமல்
தன்னைத் தானே காக்கும் வரை;
பெண் மலர் தான் மலிவல்ல!
ஆதாமின் முதுகெலும்பு ஏவாள் என்றால்...
ஏவல்களில் தேய்ந்து போன
பெண்ணியத்தின் முதுகெலும்பில்
விரிசல்களை எண்ணக்கூட
வராதொழிக்கும் ஆதாமை
சட்டை செய்யாது
விட்டு விடுதலையாகி
சிட்டுப் போல் சிறகு விரித்து
பறந்து திரிந்து
ஊரில் பல
பாரில் பல
கற்றுத் தெளிந்தாளானால்
பெண் மலர் தான் மலிவல்ல!
நாசாவில் ஏறி விண்வெளிக்குப் போனவள்
கல்பனா சாவ்லா ;
நாளுக்கு நாள்
தெருவுக்குத் தெரு ,
புறம் பேசியே
நாசமாகிப் போனவள்
எதிர் வீட்டுக் கமலா ...
அவளும் பெண்ணே!
இவளும் பெண்ணே!
தன்னைத் தானுணர்ந்து
வாழும் வகை புரிந்து விடின்
பெண் மலர் தான் மலிவல்ல!
சந்தோசம் சில நேரம்...
சங்கடங்கள் பல நேரம் ,
எல்லாம் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்...!!!
பெண்ணுக்குப் பெண்ணே எதிராகி
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொழுத்துவோம் ;
பட்டங்கள் ஆள்வதும்
சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தும் முன்னே
நிமிர்ந்த நன்னடை
நேர் கொண்ட பார்வை
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நீர்மை
தனக்குத் தானே
உறுவேற்றிக் கொண்டு
மனதில் உறுதி கொள்
வாக்கினிலே தெளிவு கொள்
பெண்ணே நீ
மலர் தான் மலிவல்ல என்றுமே!!!

(இது நான் காலேஜில் படிக்கும் போது கலந்து கொண்டு ஒரு இன்டர் காலேஜ் கவிதைப் போட்டியில் எழுதி முதல் பரிசு பெற்ற கவிதை ,வரிகளில் பல ஞாபகமில்லை ,நினைவில் நின்ற வரிகளை வைத்து ஒப்பேற்றி இருக்கிறேன் .அந்த ஒரிஜினல் கவிதை இன்னும் அர்த்தம் நிறைந்த அருமையான வரிகளுடன் இருந்ததை ஞாபகம் .இப்போதாவது சில வரிகளேனும் மறக்காமல் இருக்கிறது...இன்னும் கொஞ்ச நாள் போனாள் எல்லாமே மறந்து விடுமோ என்னவோ என்று தான் இதைப் பதிவிட்டேன் .படிப்பவர்கள் தங்களது கருத்துகளைச் சொன்னால் தேவலை !!! )



Wednesday, December 3, 2008

தாம்பத்யக் கூத்து

தெர்மாக்கோல்

அட்டை மேல்

சிக்கலின்றி

ஊடுருவிச் செல்லும்

சூடான கத்தி போல

என்னுள்ளே

ஊடுருவ

எப்படியோ

உன்னை நான்

அனுமதித்தேன்

என் சொல்கிறாய்...

என் கணவா?

முயலாமை

எல்லா

சமாதானங்களின்

முதுகின் மேலும்

சுமக்க

முடியாமல்

தொக்கி

நிற்கும்

இயலாமைகள்

முயலாமைகளோ?!

Tuesday, December 2, 2008

கதை கதையாம் காரணமாம்...(கதை சொல்லிகள்)

நான் ஐந்து ஆறாம் வகுப்புகளில் படிக்கும்போதெல்லாம் எங்கள் ஊரில் ஒவ்வொரு தெருவிலும் வாசலில் திண்ணை வைத்துக் கட்டப் பட்ட வீடுகளே அதிகம் இருந்தன.

திண்ணைகள் பெரும்பாலும் வேறு எதற்குப் பயன்பட்டதோ என்னவோ சாயந்திரம் ஆறு மணியானால் கதை கேட்கக் கூடும் சின்னப் பிள்ளைகளுக்கு அது ஒரு பட்டறை மாதிரி தான் !!!

தெருவுக்குத் தெரு இப்படிப் பட்ட கதை சொல்லிக் களங்கள் அந்த நாட்களில் எங்கள் ஊரில் நான்கைந்து இருந்தன ,சுமார் முன்னூறு வீடுகளில் எண்ணி ஐம்பது அல்லது அறுபது சிறுவர் சிறுமிகள் அப்போது இருந்தோம் என்று வைத்துக் கொண்டால் ஒவ்வொரு கதை சொல்லிக் களத்திலும்(திண்ணை தான்!!!) பத்துப் பதினைந்து பேராக சேர்ந்து உட்கார்ந்து கதை கேட்டிருப்போம் என்று நினைக்கிறேன்.

இப்போது நினைத்துப் பார்த்தால் அது ஒரு கோலாகலம் தான்!!! ஆறுமணிக்குக் கதை கேட்க மதியம் சாப்பாடுப் பீரியட் முடிந்ததிலிருந்தே நேரத்தைப் பிடித்துத் தள்ளிக்கொண்டே இருப்போம் .அது வேறு சதி செய்யும்! அப்போது பார்த்து சீகிரமே கடைசி பெல் அடிக்கும் நேரம் வரவே வராது...அது பாட்டுக்கு மந்தமாக நேரம் போவதைப் போல் இருக்கும்.

எப்போதடா சாயந்திரம் ஆகும்?

எப்போதடா பள்ளியில் கடைசி பெல் அடிப்பார்கள் ?

எப்போதடா வீட்டுக்குப் போய் புத்தகப் பையை வீசி விட்டு ஒரு பேருக்கு கையைக் காலைக் கழுவிக் கொண்டு எதையோ கொறித்து விட்டு கூட்டாளிகளுடன் வீதிக்கு ஓடுவோம் என்று இருக்கும்!!!

வீதியில் இறங்குவதோடு முடிந்து விடுமா என்ன?

இன்றைக்கு எந்தத் திண்ணையில் கதை சொல்பவர்கள் உட்காருவார்கள் என்றும் தெரிந்து கொள்ள வேண்டுமே?

பொதுவாக அப்போதெல்லாம் அவரவர் அப்பா ...அம்மாக்களை விட கதை சொல்வதற்கென்றே ஒரு சில தாத்தா பாட்டிகள் இருப்பார்கள் ஊர் ஊருக்கு!!அல்லது கல்யாணத்திற்கு காத்திருக்கும் ஒரு சில அக்காக்கள் இருப்பார்கள்!!!அதுவும் இல்லையெனில் கண்டிப்பாக ஒரு பெரிய பையன் அல்லது பெரிய பெண் இருப்பாள்

(பெரிய பையன்..பெரிய பெண் என்றால் வேறு ஒன்றும் இல்லை அவர்கள் எங்களை விட கொஞ்சமே கொஞ்சம் (ஒரு மூன்று அல்லது நான்கு வயது மூத்த பெண் அல்லது பையன்) பெரியவர்கள் ஆனால் இப்படிக் கதை கேட்பதில் சீனியர்கள்!!! அவ்வளவே?!

எங்கள் ஊரில் ,அந்தமான் தாத்தா வீட்டுத் திண்ணை தான் ரொம்ப பேமஸ் கதை கேட்க நாங்கள் கூடும் இடங்களில் அது தான் டாப் .அங்கே தான் பேமஸ் கதை சொல்லிகள் "சரசக்கா ...சீரங்கபுரம் முருகன் ,ஜோதி அத்தை...கறுப்பி மீனாச்சி இவர்களெல்லாரும் ஆஜர் ஆவார்கள் .

இவர்களில் ...

சரசக்கா மாயாஜாலக் கதைகள் சொல்வதில் தேர்ந்தவள் ,அவள் கதை சொல்லிக் கொண்டிருக்கும் பொது சில நேரம் நமக்கே பயம் வந்து விடும் "எங்கே எந்த மந்திரவாதி வந்து நம்மைத் தூக்கிக்கொண்டு போய் விடுவானோ என்று?)"நான் உத்தம பத்தினி என்றால் ஏய் தொடையே நீ இரண்டாகப் பிளந்து இந்த மீன் முள்ளை எல்லாம் யார்கண்ணுக்கும் தெரியாமல் மறைத்து விடு "என்று குத்துவிளக்கு(கதை நாயகி ) தன் இறந்து போன தாயை நினைத்துக் கொண்டு ஆணையிட்டால் அவளது தொடை இரண்டாகப் பிளந்து அவள் சொன்னதை செய்யும்...சரசக்கா இதை நமக்கு கண்கூடாகப் பார்க்க வைப்பது போலவே சன்னதம் வந்து பேசுபவர்கள் போல கதை சொல்வாள் .

சரசக்கா இப்போது எங்கிருக்கிறாளோ ? அவள் சொன்ன கதை மட்டும் நெஞ்சோடு நீங்காமல்!!!

முருகன் சொல்லும் கதைகள் பெரும்பாலும் ஹீரோ ...கொள்ளைக் கூட்டம் ..இந்த வகையறாக்கள் தான் .கண்டிப்பாக கடைசியில் ஹீரோ கொள்ளைக் கூட்டத்தை ஜெயித்து ஊர் மக்களைக் காப்பாற்றுவார் .ஒரே ஒரு கதையை முடிக்க அவனுக்கு பத்துப் பதினைந்து நாட்கள் கூட ஆகும்(பாதர் ஆப் மெகா சீரியல் வேர்ல்ட் என்று அவனுக்குப் பட்டம் கொடுத்தால் கூட தவறே இல்லை).

T.v (TELEVISION)கூடப் பிரபலமில்லாத அந்தக் காலத்தில் அவன் எங்களுக்கு இடையில் உணவு இடைவேளை எல்லாம் கூட விட்டுக் கதை சொன்னான் என்றால் மெகா சீரியல் தந்தை என்ற பட்டம் தரலாம் தானே?

ஜோதி அத்தை நிறைய சாமிக் கதைகள் சொல்லுவார்.ஆயிரம் கண் மாரியம்மாள் கதை,நீலி கதை...கருப்ப சாமி வேட்டைக்குப் போகும் கதை...அய்யனார் கதை...இப்படி நிறைய!

கருப்பு மீனாச்சிக்கு எம்.ஜி.ஆர் என்றால் கொள்ளைப் பிரியம் .அவளது கதைகளில் எல்லாம் எம்.ஜி.ஆர் தான் ஹீரோ ...வில்லன் பெரும்பாலும் அசோகன் தான்(நம்பியாரை அவளுக்குப் பிடிக்காதோ என்று எங்களுக்கெல்லாம் சந்தேகம்) அப்போது அவளிடம் இதைக் கேட்கவில்லை இப்போது அவள் எங்கிருக்கிறாளோ?

கதை சொல்லிகள் என்று தனியாக ஆட்களைத் தேடாமல் எங்களுக்குள் வாழ்ந்து இன்று எங்கேயோ இருந்தாலும் அவர்கள் எல்லோரையும் எதோ சில சமயங்களில் நினைக்க வைப்பது அவர்கள் சொன்ன கதைகள் தானே!!!

ஞாபகம் வந்ததால் இதைப் பதிந்தேன் .

Monday, December 1, 2008

அப்படிப் போடுங்க கலைஞரே!!!

கலைஞரை விட சிறந்த ஒரு ராஜதந்திரியை எங்கு தேடினாலும் கிடைப்பது அரிதே.தேர்தல் நெருக்கத்தில் முட்டிக் கொண்டு நின்ற எல்லோரையுமே ஏதோ ஒரு வகையில் சாந்தப் படுத்தி நிலைமையை தனக்குச் சாதகமாக மாற்றி விட்டாரே!!!.
மாறன் பிரதர்ஸ்...மதுரை அழகிரி பிரச்சினை இப்போதைக்கு முடியாது என்று தான் பொது மக்கள் நினைத்திருக்கக் கூடும்,இதோ இன்றென்னவோ ஒன்று சேர்ந்து விட்டதைப் போல ஒரு காட்சி பிழையை உண்டாக்கி இருக்கிறார்கள்!பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் இவர்களது ஒற்றுமையை .
காடு வெட்டி குருவை விடுதலை செய்து ராமதாசையும் கூல் பண்ணி விட்டார்,குரு எதற்கு கைது செய்யப் பட்டார்? கலைஞரை திட்டியதற்கா அல்லது தேசியப் பாதுகாப்பிற்கு ஊரு விளைவிக்கும் வண்ணம் தனி மனித நிந்தனையும்,மிரட்டலும் விடுத்ததர்க்கா?அதுவே இன்னும் புரிந்த பாடில்லை.
அதற்குள் கூட்டணியில் இருந்து பா.ம.கா விலகல்...ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் பத்திரிகைகளில் சாடல் எல்லாம் முடிந்து இலங்கைப் பிரச்சினை வந்தது,அது முடியவில்லை ...அதற்குள் வை.கோ கைது .seeman,அமீர் கைது என்று பிரச்சினை திசை திரும்பியது .
யார் யாரெல்லாமோ புதுக் கட்சி ஆரம்பிக்கப் போகிறார்கள் எனும் காமெடி ஹாஸ்யம் உலா வந்தது.
இது அந்த இயற்கைக்கே பொறுக்கவில்லையோ என்னவோ?கடந்த ஒரு வாரமாக பேய் மழையாகக் கொட்டி முழக்கி விட்டு பெரும் களேபரத்தை உண்டாக்கி ஓயும் முன் மும்பையில் குண்டு வைத்தார்கள் சில மூட மிருகங்கள்,"இந்தியன் தானே எல்லாம் தாங்குவான் "என்று இயற்கையும் ஒரு கணக்கு வைத்திருக்குமோ என்னவோ?ஏதோ இன்றைக்கு காலையில் தான் ஒனால் போகிறதென்று வானம் சூரியனை கொஞ்சம் வெளியில் காட்டியது.அப்பாடா என்று ஆசுவாசமாய் மூச்சு விட்டுக் கொண்டு நிமிர்வதற்குள் ;
மாறன் அழகிரி சந்திப்பு,கலைஞர் மாறன் சந்திப்பு என்று ஊடகங்கள் பல்லாண்டு பாடுகின்றன.எது எப்படியோ?எத்தனையோ பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கலைஞர் வீட்டு குடும்பச் சண்டை மாகாத்மியங்களையும் கேட்டே ஆகா வேண்டிய கட்டாய சூழ்நிலை தன்மானத் தமிழனுக்கு இன்று வந்து விட்டது .பத்திரிக்கை முதற்கொண்டு...டி.வி வரை ஊடகங்களின் துணை கொண்டு அவர்கள் என்னவோ ஜனநாயகம் என்ற பெயரில் இங்கே நவீன மன்னராட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் வாரிசு அடிப்படையில் பதவிகளை அனுபவித்துக் கொண்டு இன்னும் நீண்ட காலம் நல்லாட்சி தருவார்கள் .
நம்பிக்கையில் நான்காம் நிலைத் தொண்டன் போஸ்டர் ஒட்டட்டும் .
நாமெல்லாம் வேடிக்கை பார்ப்போம்!!!
வேறு என்ன கிழித்து விட முடியும் நம்மால் இதைத் தவிர?!