Saturday, December 6, 2008

பெண் மலர் தான் மலிவல்ல...?!

பெண் மலர் தான் மலிவல்ல...
சில்லறை வண்டுகள் ரீங்காரமிடும்போது ,
சில்லிட்டு உறையாமல்
சிக்காமல் மீண்டு எழுந்தால் ;
பெண் மலர் தான் மலிவல்ல...!
ஆப்பிள் தேவதைகள் தான் ...
அழுகிப் போகாமல் காக்கும் வரை ;
சாக்லேட் தேவதைகள் தான் ...
சாக்கடையில் நழுவாமல்
தன்னைத் தானே காக்கும் வரை;
பெண் மலர் தான் மலிவல்ல!
ஆதாமின் முதுகெலும்பு ஏவாள் என்றால்...
ஏவல்களில் தேய்ந்து போன
பெண்ணியத்தின் முதுகெலும்பில்
விரிசல்களை எண்ணக்கூட
வராதொழிக்கும் ஆதாமை
சட்டை செய்யாது
விட்டு விடுதலையாகி
சிட்டுப் போல் சிறகு விரித்து
பறந்து திரிந்து
ஊரில் பல
பாரில் பல
கற்றுத் தெளிந்தாளானால்
பெண் மலர் தான் மலிவல்ல!
நாசாவில் ஏறி விண்வெளிக்குப் போனவள்
கல்பனா சாவ்லா ;
நாளுக்கு நாள்
தெருவுக்குத் தெரு ,
புறம் பேசியே
நாசமாகிப் போனவள்
எதிர் வீட்டுக் கமலா ...
அவளும் பெண்ணே!
இவளும் பெண்ணே!
தன்னைத் தானுணர்ந்து
வாழும் வகை புரிந்து விடின்
பெண் மலர் தான் மலிவல்ல!
சந்தோசம் சில நேரம்...
சங்கடங்கள் பல நேரம் ,
எல்லாம் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்...!!!
பெண்ணுக்குப் பெண்ணே எதிராகி
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொழுத்துவோம் ;
பட்டங்கள் ஆள்வதும்
சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தும் முன்னே
நிமிர்ந்த நன்னடை
நேர் கொண்ட பார்வை
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நீர்மை
தனக்குத் தானே
உறுவேற்றிக் கொண்டு
மனதில் உறுதி கொள்
வாக்கினிலே தெளிவு கொள்
பெண்ணே நீ
மலர் தான் மலிவல்ல என்றுமே!!!

(இது நான் காலேஜில் படிக்கும் போது கலந்து கொண்டு ஒரு இன்டர் காலேஜ் கவிதைப் போட்டியில் எழுதி முதல் பரிசு பெற்ற கவிதை ,வரிகளில் பல ஞாபகமில்லை ,நினைவில் நின்ற வரிகளை வைத்து ஒப்பேற்றி இருக்கிறேன் .அந்த ஒரிஜினல் கவிதை இன்னும் அர்த்தம் நிறைந்த அருமையான வரிகளுடன் இருந்ததை ஞாபகம் .இப்போதாவது சில வரிகளேனும் மறக்காமல் இருக்கிறது...இன்னும் கொஞ்ச நாள் போனாள் எல்லாமே மறந்து விடுமோ என்னவோ என்று தான் இதைப் பதிவிட்டேன் .படிப்பவர்கள் தங்களது கருத்துகளைச் சொன்னால் தேவலை !!! )



No comments: