பள்ளி விட்ட
மாலை நேரம்
முதன் முதலாய்
புத்தம் புது தாவணியில்
சிட்டாக நீ பறக்க யத்தனிக்கையில்
செப்பனிட குவிக்கப் பட்ட
சரளைக் கற்களில்
இடரப் பட்ட உன் பாதங்கள்
தடுமாறி சரியும்போதா
இடம் மாறியது என் நெஞ்சம்?!
இன்னும் தெளிவில்லை ...!
எட்டி நின்று பெட்டிக்கடையில்
முறுக்கு வாங்கித் தின்கையிலே
விட்டு விட்டு அலறிய
உன் மென் குரலால்
சட்டென்று விழி நிறைத்தாய்
என் சிந்தையிலும் நீ நிறைந்தாய்...
பட்டு பூச்சியடி ...
நீ என் பாவை சந்திர பிம்பமடி !
அன்று நீ விழுந்திடாமல்
பாங்கோடு தாங்கி எழுப்பியவன்
அன்றே தான் விழுந்து விட்டேன்
உன் படபடக்கும் இமை நடுவில் ?!
எங்கே போனாலும்
உன் நினைவு துரத்துதடி
காணாமல் போனது போல்
வாழ மனம் முயலுதடி ...
என் கண்ணில் பாவையன்றோ ?
கண்ணம்மா எங்கும் உனைக் காண்பேனோ?
இன்னும் ஒரு பிறவி எடுப்பேனோ
ஏந்திழையே உனக்காக !?
எங்கே நான் தொலைந்தேன் ?
காதலில் உருகி வழியும் போதா ?
பெண் கேட்டு வந்த போதா ?
திருமணம் பேசி முடித்த போதா?
மூன்று முடிச்சு இட்ட போதா ?
ஊது பத்தி புகை மணக்க
கட்டில் சம்பங்கி மணம் நிறைக்க
கண்ணோடு கண் சேர்த்து
முயங்கும்போதா ...?!
எங்கே நான் தொலைந்தேன் ?
பிள்ளைக் கனியமுதாய்
பேசும் பொற்சித்திரமாய்
சின்னவளை மடியிலிட்டு
தாலாட்டுச் பாடிப் பாடி
என்னையும் தூங்க வைத்தாய் ...
அங்கே தான் தொலைந்தேனோ?
இன்னும் தெளியவில்லை
எங்கே தான் தொலைந்தேனோ?
2 comments:
அன்று நீ விழுந்திடாமல்
பாங்கோடு தாங்கி எழுப்பியவன்
அன்றே தான் விழுந்து விட்டேன்
உன் படபடக்கும் இமை நடுவில் ?//
என்ன இன்னுமே தெளியலையா??? என்ன இதயத்திலயா இமையிலயா விழுந்தீங்கள்??
முதன் முதலாய்
புத்தம் புது தாவணியில் //
இதுவே ஒரு கவிதைதான்
Post a Comment