Wednesday, December 17, 2008

அரை ஆழாக்கு நைஸ் புழுதி...

ஆடி மாதமே காற்றாடிக் காலம் முடிந்து விடவில்லை,இன்னும் ...இப்போதும் தொடர்கிறது என்பதை ஜன்னல் திறந்திருப்பின் நடு வீட்டுக்குள் வாரி வீசும் புழுதிக் காற்றை வைத்தே தீர்மானிக்கலாம்.இயல்பில் ஆடி மாசம் தான் காற்றுக் காலம்!
"ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும்" இந்தப் பழமொழியே சாட்சி ;
"புரட்டாசியும் ஐப்பசியும்" அடைமழைக் காலங்கள் தான்,
"மார்கழி" குளிர் காலம்,கூதிர் காலம் பனிக் காலம் இப்படி எப்படி சொன்னாலும் மார்கழி குளிர் தானே மனசில் நிற்கும்.
பருவ நிலை மாற்றமோ என்னவோ? ஆடி மாதத்தில் எல்லாம் இப்போது காற்று கம்மியாகி விட்டதைப் போலொரு பிரமை?! ஆடியை விட மார்கழி தொடக்கம் முதலே அள்ளி அள்ளி வீசுகிறது காற்று (குப்பை...கூலம்...புழுதி வித்யாசமெல்லாம் வாடைக் காற்றுக்கு இல்லை போலும்!).
காற்றாடி (பட்டம் என்றும் சொல்லலாம்!) விடும் பையன்கள் மொட்டை மாடிக்குப் போகவே வேண்டாம்...முச்சந்தியில் நின்று கொண்டு தாராளமாக விடலாம்.பிய்த்துக் கொண்டு பறக்கும் காற்றாடி நூலோடு!அது பறந்து போய் யார் கழுத்தைச் சுற்றினால் தான் காற்றுக்கு என்ன வந்தது? கன ஜோராக வீசிக்கொண்டு இருக்கும் அது பாட்டுக்கு மார்கழி ,தை என்று விவஸ்தை எதுவுமின்றி!
இந்த மார்கழியில் தானா அரைப் பரீட்சை வைத்து லீவு விடுவது? இந்தப் பள்ளிக்கூட வாத்தியார்களுக்கு கொஞ்சமேனும் பெற்றோரின் கஷ்ட நஷ்டம் புரிவதே இல்லை எந்தக் காலத்திலும் ...அவர்கள் பாட்டுக்கு பரீட்சை என்று ஒன்றை வைத்து வருசத்துக்கு மூன்று தடவையாச்சும் லீவு விட்டு விடுகிறார்கள்?!
என்னாத்திற்கு இந்த லீவு என்கிறார்கள் பெற்றோர்கள்? பிள்ளைகள் வருஷம் முழுக்க நன்றாய் படிக்கட்டுமே! அதில் என்ன குடி முழுகி விடும்? இது சாத்தியமே இல்லை என்பது தெரியும் ."வாண்டுகளா ...வானரங்களா"...என்று சந்தேகம் வரவைப்பதைப் போல சில பிள்ளைகள் சேஷ்டைகள் செய்வதால் எல்லாப் பிள்ளைகளுக்கும் லீவு விட்டு விடுவதாக எங்கள் வீட்டு வாண்டு ஒருமுறை சொல்லியதுண்டு!!!
லீவு விடும் பழக்கத்தை யாராலும் மாற்றவே முடியாது தான் .குறைந்த பட்சம் இந்தக் காற்றுக் காலாத்திலாவது லீவேவிடக்கூடாது...ஐயோடா...இந்தக் குட்டி குறுமாணிகள் எல்லாம் தெருப் புழுதியில் தான் விழுந்து கும்மாலமடிக்கின்றன.உடம்புக்கு எது வேண்டுமானாலும் வந்து விடாதோ? சதா புழுதியில் புரண்டு ஆடினால்?
அட வீட்டிற்குள் அடைத்து வைக்கலாமென்றாலும் ஒரு பிரஜோஜனமும் இல்லை ?! தினப் படி ஐந்து முறை வீட்டை ஒழுங்கு பண்ணி கூட்டிப் பெருக்கி கழுவினாலும் தாராளமாய் ஒவ்வொரு தடவையும் அரை ஆழாக்கு நைஸ் புழுதி கிடைக்கிறது குப்பை வழித்தெடுக்கும்
பிளாஸ்டிக் முறத்தில்.
இந்த விஞ்சானிகள் எல்லாம் என்னெனவோ கண்டுபிடிக்கிறார்களே !...இந்த நைஸ் புழுதியை வைத்து ஆராய்ச்சி கீராய்ச்சி எதுவோ செய்து ஏதாவது கண்டு பிடித்தால் புண்ணியமாய் போகாதோ?
பாவம் காற்றுக்கு வாய் இருந்தால் அது கூட ஒரு பாட்டம் அழுது விட்டிருக்கும் புழுதியை அது வாரிக் கொண்டு வந்து வீட்டுக்குள்ளும் ...வீட்டடியிலும் போடப் போட நாமும் சளைக்காமல் கூட்டிப்பெருக்கி முறத்தில் அள்ளி அள்ளி அள்ளி மறுபடி தெருவிலேயே வீசுகிறோமே? இதைப் பார்த்துப் பார்த்து காணச் சகியாமல் அந்தக் காற்றும் கூட வாய் இருந்தால் கதறி அழக் கூடும் தான்!!!
கணவர்கள் தங்கள் மனைவிகளின் மேல் உள்ள கோபத்தை தீர்த்துக் கொள்ள தாராளமாக இந்த மாதத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நைஸாகப் பேசி பேசியே அவர்களை குறைந்த பட்சம் ஒரு வாரமேனும் அம்மா வீட்டுக்கு அனுப்பி விட்டு .துல்லியமாக அவர்கள் அம்மா வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு(மனைவிகளுக்கு புருஷன் வீடு புகுந்த வீடு தானே!!!) வரும் போது நீங்கள் ஆபிஸ் டூர் என்று ஓடியே போய் விடலாம் ?!
புழுதி அடைந்து போய் பாழடைந்த பங்களா எபெக்டில் இருக்கும் வீட்டை சுத்தம் செய்வது பெரிய தண்டனை தான் மனைவிகளைக் கேட்டுப் பார்க்கலாம் விவரம் தெரியாதவர்கள்.இந்த நைஸ் புழுதி இருக்கிறதே அது ஒரு சாபக் கேடு என்கிறார்கள் பெண்கள் எல்லோருமே ஒட்டுமொத்தமாக.
இதனால் என்னென்ன வரலாம் என்று ஒரு லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறார்கள் அவர்கள்,
ஆஸ்த்துமா
வறட்டு இருமல்
தொடர் தும்மல்
மூச்சுத் திணறல்
மூக்கடைப்பு
அப்புறம்...அப்புறம்...
கண்ணீர் !!!(கண்ணில் புழுதி விழுந்தாலும் கண்ணீர் வரும் தானே?!)அழுகை !!!( எவ்வளவு பெருக்கினாலும் தீராத புழுதிப் படலம் தட்டுப் பட்டால் அழுகையும் வரும் தானே!?)
சண்டை !!!(நைஸ் புழுதி பெருக்கிப் பெருக்கியே ஆய்ந்து ஓய்ந்து போய் உட்கார நினைத்தால் அந்நேரம் கணவரோ...பிள்ளைகளோ ஏதாவது கேட்டால் கட்டாயம் சண்டை வரும் தானே?!)
ச்சே...ச்சே...இந்த மார்கழியில் இந்த நைஸ் புழுதியால் வந்த வினையைப் பாருங்கள் எவ்வளவு நீளமான கட்டுரை எழுத வேண்டியதாகிப் போச்சு !!!எல்லாம் புழுதி மயம்!!!
பாத்திரம்...பண்டம்...உடுப்புகள்...கட்டில்....பீரோ ... கண்ணாடி ...சுவர் ...தரை எங்கும் புழுதி மயம்.
எனக்கு ஒரே ஆயாசமாய் இருக்கிறதப்பா !
அப்போ உங்களுக்கு ?எப்படி இருக்கும் என்று எழுதுங்கள் பின்னூட்டத்தில் .

No comments: