Wednesday, December 17, 2008

அரை ஆழாக்கு நைஸ் புழுதி...

ஆடி மாதமே காற்றாடிக் காலம் முடிந்து விடவில்லை,இன்னும் ...இப்போதும் தொடர்கிறது என்பதை ஜன்னல் திறந்திருப்பின் நடு வீட்டுக்குள் வாரி வீசும் புழுதிக் காற்றை வைத்தே தீர்மானிக்கலாம்.இயல்பில் ஆடி மாசம் தான் காற்றுக் காலம்!
"ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும்" இந்தப் பழமொழியே சாட்சி ;
"புரட்டாசியும் ஐப்பசியும்" அடைமழைக் காலங்கள் தான்,
"மார்கழி" குளிர் காலம்,கூதிர் காலம் பனிக் காலம் இப்படி எப்படி சொன்னாலும் மார்கழி குளிர் தானே மனசில் நிற்கும்.
பருவ நிலை மாற்றமோ என்னவோ? ஆடி மாதத்தில் எல்லாம் இப்போது காற்று கம்மியாகி விட்டதைப் போலொரு பிரமை?! ஆடியை விட மார்கழி தொடக்கம் முதலே அள்ளி அள்ளி வீசுகிறது காற்று (குப்பை...கூலம்...புழுதி வித்யாசமெல்லாம் வாடைக் காற்றுக்கு இல்லை போலும்!).
காற்றாடி (பட்டம் என்றும் சொல்லலாம்!) விடும் பையன்கள் மொட்டை மாடிக்குப் போகவே வேண்டாம்...முச்சந்தியில் நின்று கொண்டு தாராளமாக விடலாம்.பிய்த்துக் கொண்டு பறக்கும் காற்றாடி நூலோடு!அது பறந்து போய் யார் கழுத்தைச் சுற்றினால் தான் காற்றுக்கு என்ன வந்தது? கன ஜோராக வீசிக்கொண்டு இருக்கும் அது பாட்டுக்கு மார்கழி ,தை என்று விவஸ்தை எதுவுமின்றி!
இந்த மார்கழியில் தானா அரைப் பரீட்சை வைத்து லீவு விடுவது? இந்தப் பள்ளிக்கூட வாத்தியார்களுக்கு கொஞ்சமேனும் பெற்றோரின் கஷ்ட நஷ்டம் புரிவதே இல்லை எந்தக் காலத்திலும் ...அவர்கள் பாட்டுக்கு பரீட்சை என்று ஒன்றை வைத்து வருசத்துக்கு மூன்று தடவையாச்சும் லீவு விட்டு விடுகிறார்கள்?!
என்னாத்திற்கு இந்த லீவு என்கிறார்கள் பெற்றோர்கள்? பிள்ளைகள் வருஷம் முழுக்க நன்றாய் படிக்கட்டுமே! அதில் என்ன குடி முழுகி விடும்? இது சாத்தியமே இல்லை என்பது தெரியும் ."வாண்டுகளா ...வானரங்களா"...என்று சந்தேகம் வரவைப்பதைப் போல சில பிள்ளைகள் சேஷ்டைகள் செய்வதால் எல்லாப் பிள்ளைகளுக்கும் லீவு விட்டு விடுவதாக எங்கள் வீட்டு வாண்டு ஒருமுறை சொல்லியதுண்டு!!!
லீவு விடும் பழக்கத்தை யாராலும் மாற்றவே முடியாது தான் .குறைந்த பட்சம் இந்தக் காற்றுக் காலாத்திலாவது லீவேவிடக்கூடாது...ஐயோடா...இந்தக் குட்டி குறுமாணிகள் எல்லாம் தெருப் புழுதியில் தான் விழுந்து கும்மாலமடிக்கின்றன.உடம்புக்கு எது வேண்டுமானாலும் வந்து விடாதோ? சதா புழுதியில் புரண்டு ஆடினால்?
அட வீட்டிற்குள் அடைத்து வைக்கலாமென்றாலும் ஒரு பிரஜோஜனமும் இல்லை ?! தினப் படி ஐந்து முறை வீட்டை ஒழுங்கு பண்ணி கூட்டிப் பெருக்கி கழுவினாலும் தாராளமாய் ஒவ்வொரு தடவையும் அரை ஆழாக்கு நைஸ் புழுதி கிடைக்கிறது குப்பை வழித்தெடுக்கும்
பிளாஸ்டிக் முறத்தில்.
இந்த விஞ்சானிகள் எல்லாம் என்னெனவோ கண்டுபிடிக்கிறார்களே !...இந்த நைஸ் புழுதியை வைத்து ஆராய்ச்சி கீராய்ச்சி எதுவோ செய்து ஏதாவது கண்டு பிடித்தால் புண்ணியமாய் போகாதோ?
பாவம் காற்றுக்கு வாய் இருந்தால் அது கூட ஒரு பாட்டம் அழுது விட்டிருக்கும் புழுதியை அது வாரிக் கொண்டு வந்து வீட்டுக்குள்ளும் ...வீட்டடியிலும் போடப் போட நாமும் சளைக்காமல் கூட்டிப்பெருக்கி முறத்தில் அள்ளி அள்ளி அள்ளி மறுபடி தெருவிலேயே வீசுகிறோமே? இதைப் பார்த்துப் பார்த்து காணச் சகியாமல் அந்தக் காற்றும் கூட வாய் இருந்தால் கதறி அழக் கூடும் தான்!!!
கணவர்கள் தங்கள் மனைவிகளின் மேல் உள்ள கோபத்தை தீர்த்துக் கொள்ள தாராளமாக இந்த மாதத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நைஸாகப் பேசி பேசியே அவர்களை குறைந்த பட்சம் ஒரு வாரமேனும் அம்மா வீட்டுக்கு அனுப்பி விட்டு .துல்லியமாக அவர்கள் அம்மா வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு(மனைவிகளுக்கு புருஷன் வீடு புகுந்த வீடு தானே!!!) வரும் போது நீங்கள் ஆபிஸ் டூர் என்று ஓடியே போய் விடலாம் ?!
புழுதி அடைந்து போய் பாழடைந்த பங்களா எபெக்டில் இருக்கும் வீட்டை சுத்தம் செய்வது பெரிய தண்டனை தான் மனைவிகளைக் கேட்டுப் பார்க்கலாம் விவரம் தெரியாதவர்கள்.இந்த நைஸ் புழுதி இருக்கிறதே அது ஒரு சாபக் கேடு என்கிறார்கள் பெண்கள் எல்லோருமே ஒட்டுமொத்தமாக.
இதனால் என்னென்ன வரலாம் என்று ஒரு லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறார்கள் அவர்கள்,
ஆஸ்த்துமா
வறட்டு இருமல்
தொடர் தும்மல்
மூச்சுத் திணறல்
மூக்கடைப்பு
அப்புறம்...அப்புறம்...
கண்ணீர் !!!(கண்ணில் புழுதி விழுந்தாலும் கண்ணீர் வரும் தானே?!)அழுகை !!!( எவ்வளவு பெருக்கினாலும் தீராத புழுதிப் படலம் தட்டுப் பட்டால் அழுகையும் வரும் தானே!?)
சண்டை !!!(நைஸ் புழுதி பெருக்கிப் பெருக்கியே ஆய்ந்து ஓய்ந்து போய் உட்கார நினைத்தால் அந்நேரம் கணவரோ...பிள்ளைகளோ ஏதாவது கேட்டால் கட்டாயம் சண்டை வரும் தானே?!)
ச்சே...ச்சே...இந்த மார்கழியில் இந்த நைஸ் புழுதியால் வந்த வினையைப் பாருங்கள் எவ்வளவு நீளமான கட்டுரை எழுத வேண்டியதாகிப் போச்சு !!!எல்லாம் புழுதி மயம்!!!
பாத்திரம்...பண்டம்...உடுப்புகள்...கட்டில்....பீரோ ... கண்ணாடி ...சுவர் ...தரை எங்கும் புழுதி மயம்.
எனக்கு ஒரே ஆயாசமாய் இருக்கிறதப்பா !
அப்போ உங்களுக்கு ?எப்படி இருக்கும் என்று எழுதுங்கள் பின்னூட்டத்தில் .

புரட்டாசி கோவிந்தாக்கள்,ஆடி ஆத்தாக்கள்,மற்றும் பிச்சைக் காரர்கள்

பெருந்தொல்லைகள்:-
வாழ்க்கையில் பெரிய..பெரிய தொல்லைகள் எல்லாம் எப்படி வந்து சேருகின்றன என்று பாருங்கள்.தொல்லை என்பதெல்லாம் வெறும் வார்த்தை ...அது பெரிய கொடுமை என்றும் சொல்லத் தகும்.

உங்கள் குடியிருப்பில் உங்கள் வீடே முதல் வீடா? பிடித்தது ஏழரைச் சனி !!!போஸ்ட் மேனில் இருந்து கறிகாய் விற்பவர் வரை ungal மண்டையில் தான் முதல் மணி அடிக்கக் கூடும் ! கூரியர் காரர்களையும் சும்மா சொல்லக் கூடாது . அடுத்த வீட்டில் ஆளில்லா விட்டால் உங்கள் வீட்டு காலிங் பெல்லே எல்லோருக்கும் இதம் தரும் இன்னிசை ஆகக் கூடும்.

புரட்டாசியில் "கோவிந்தாக்கள் சங்கப் பிரபலங்கள்

"ஆடியில் ..."ஆத்தாவுக்கு கூழ் ஊத்துவோர் சங்கக் கண்மணிகள்"

வீட்டுக்குப் பக்கத்தில் "பிள்ளையார்...அம்மன்...நாகாத்தம்மன்...முருகன்...இன்ன பிற தெய்வங்கள் குடியிருந்தால்...திருவிழாக் காலங்களில் உங்கள் பர்ஸ் கதறிக் கொண்டு தினம் அழலாம்.அப்படி ஒரு பெருங்க் (கொள்ளைக்) கூட்டம் முற்றுகை இடும் முதல் வீட்டில் முதல் முதலாய்.

பிச்சைக் காரர்கள் சங்கம் வைத்து கூட்டம் போட்டுத் தண்டிக்க நினைத்தால் முதலிடம் முதல் வீட்டுக் காரர்களுக்கே?!

"பாழாப் போன வீடு...நாசமாப் போக...கூச்ச ...நாச்சமே இல்ல எட்டி நின்னு எட்டணா போடறான் அந்த முத வீட்டுக் முட்டாக் கபோதி ..." திட்டுக்கள் தாராளமாய் விழலாம் என்றேனும் நீங்கள் அச்சங்க கூட்டத்தில் சிறப்பு விருந்தினராய் கலந்த கொள்ள வாய்ப்பிருப்பின்!!!

இது மட்டுமா?

விற்ப்பனை பிரதிநிதிகளின் வயிற்றெரிச்சல் வேறு?

"எப்போ போனாலும் லேசா தொறந்து எட்டிப் பார்த்துட்டு வேணாம் போன்னு வெரட்டுறான் அந்த வெங்கம் பய ..." இவனப் போயி எவன் குடி வச்சான் முத வீட்டுல? சனி முகத்துல முழிச்ச மாதிரி தான் ஒன்னும் போனியாகள இன்னைக்கும்"

இதெல்லாம் சும்மா சாம்பிளுக்கு தான் ...

அனுபவம் இருந்தா நீங்களும் கொட்டுங்க உங்க மான அவமானத்தை .

குறிப்பு:- முதல் வீட்டுக் குடித்தனக்காரராகவோ அல்லது அப்படிப் பட்ட அனுபவம் வாய்ந்தவராகவோ இருத்தல் அவசியம் .

பஸ் ஸ்டாண்ட் பெண்கள்

அவள் பெண்ணா இல்லை பேரழகியா ?
ஏதோ ஒரு பேருந்து நிறுத்தத்தில் தான் பார்த்தேன் ஒருநாள்.அந்த நாளே முதல் நாள்!அவள் என்னைப் பார்த்தாளா இல்லையா என்பது இன்றும் எனக்குத் தெரியாது.
நான் அவளைப் பார்த்தேன் ...
நான் மட்டுமே அவளைப் பார்த்தேன் என்பதற்கில்லை...!
அந்தப் பேருந்து நிறுத்தத்தில் இருந்த இன்னும் சிலரும் கூட பார்க்கத்தான் செய்திருப்பார்கள் ?!
அதெல்லாம் சும்மா டைப் ஆசாமிகளாக இருக்கலாம்!
ஜாலி சைட் ஜல்லிகளாகவும் இருக்கலாம்!
என்னைப் போல அவள் ஒவ்வொரு அசைவையும் யாரேனும் பார்த்தார்களோ என்னவோ ?வாய்ப்பு இல்லை என்று தான் நினைக்கிறேன். அவளது கண்களை விட்டு என்னால் அகலவே முடியவில்லை.நான் அவளைத்தான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் என்பதை அவள் உணர்ந்தது போலவே தெரியவில்லை.
நீண்ட நேரமாக நின்று கொண்டே இருக்கிறாள் அவள்.நானும் தான்.அவள் ஏற வேண்டிய பேருந்து இன்னும் வரக் காணோம்.அப்போது நேரம் மாலை 4.30 pm .இன்னும் 2 மணி நேரம் போனாலும் பரவாயில்லை அவளை ஏற்றிச் செல்லும் பேருந்து மட்டும் வரக் கூடாது இப்போதைக்கு என்று நினைத்துக் கொண்டேன்.
நினைத்த மாத்திரத்தில் உடனே ஒரு பேருந்து வந்தது .
அதுவே அவள் செல்லும் பேருந்து .
ஒயிலாக ஏறிக் காணாமல் போனால் என் கண் கவர்ந்த பெண் மயிலாள் .
என்ன செய்வேன் நான்?
அடுத்த பேருந்துக்கு காத்திருந்தேன் என்று கற்ப்பனை செய்யாதீர்கள்!!!எனக்கும் செல்ல வேண்டிய பேருந்து வரவே நானும் அதில் ஏறிக் கடந்தேன் .
அவ்வளவு தான் .
நீங்கள் என்ன நினைத்துக் கொண்டீர்களோ...கொள்வீர்களோ....? நடந்தது இது தான் .
இது மட்டும் தான்!!!

Tuesday, December 16, 2008

உன்னோடு நானிருந்த பொழுதுகளில் எங்கே நான் தொலைந்தேனோ?

பள்ளி விட்ட

மாலை நேரம்

முதன் முதலாய்

புத்தம் புது தாவணியில்

சிட்டாக நீ பறக்க யத்தனிக்கையில்

செப்பனிட குவிக்கப் பட்ட

சரளைக் கற்களில்

இடரப் பட்ட உன் பாதங்கள்

தடுமாறி சரியும்போதா

இடம் மாறியது என் நெஞ்சம்?!

இன்னும் தெளிவில்லை ...!

எட்டி நின்று பெட்டிக்கடையில்

முறுக்கு வாங்கித் தின்கையிலே

விட்டு விட்டு அலறிய

உன் மென் குரலால்

சட்டென்று விழி நிறைத்தாய்

என் சிந்தையிலும் நீ நிறைந்தாய்...

பட்டு பூச்சியடி ...

நீ என் பாவை சந்திர பிம்பமடி !

அன்று நீ விழுந்திடாமல்

பாங்கோடு தாங்கி எழுப்பியவன்

அன்றே தான் விழுந்து விட்டேன்

உன் படபடக்கும் இமை நடுவில் ?!

எங்கே போனாலும்

உன் நினைவு துரத்துதடி

காணாமல் போனது போல்

வாழ மனம் முயலுதடி ...

என் கண்ணில் பாவையன்றோ ?

கண்ணம்மா எங்கும் உனைக் காண்பேனோ?

இன்னும் ஒரு பிறவி எடுப்பேனோ

ஏந்திழையே உனக்காக !?

எங்கே நான் தொலைந்தேன் ?

காதலில் உருகி வழியும் போதா ?

பெண் கேட்டு வந்த போதா ?

திருமணம் பேசி முடித்த போதா?

மூன்று முடிச்சு இட்ட போதா ?

ஊது பத்தி புகை மணக்க

கட்டில் சம்பங்கி மணம் நிறைக்க

கண்ணோடு கண் சேர்த்து

முயங்கும்போதா ...?!

எங்கே நான் தொலைந்தேன் ?

பிள்ளைக் கனியமுதாய்

பேசும் பொற்சித்திரமாய்

சின்னவளை மடியிலிட்டு

தாலாட்டுச் பாடிப் பாடி

என்னையும் தூங்க வைத்தாய் ...

அங்கே தான் தொலைந்தேனோ?

இன்னும் தெளியவில்லை

எங்கே தான் தொலைந்தேனோ?

அதென்ன உட்டாலக்கடி வேலை?

அதென்ன பாரபட்சம் ?
தமிழ்மணம் ஒரு திரட்டி .அதில் இடுகைகளை புதியவர்களும் இடுகிறோம்,பழைய பதிவர்களும் இடுகிறார்கள்.எப்போது பார்த்தாலும் ஒரு சில பதிவர்களின் இடுகைகள் மட்டுமே சூடான இடுகைகளிலும்...வாசகர் பரிந்துரைகளிலும் வருகிறது,இது எப்படி சாத்தியம்? அப்படி சூடான இடுகைகளில் வரும் பதிவுகள் தான் நல்ல பதிவுகளா என்ன? எந்த அடிப்படையில் சூடான இடுகைகள் தேர்ந்தெடுக்கப் படுகின்றன?அதிக பின்னூட்டங்கள் பெற்ற இடுகைகள் தான் சூடான இடுகைகளா?அப்படியானால் பதிவர்களே அனானி பின்னூட்டங்கள் இட்டுக் கொண்டும்...கருத்துக்கள் அற்ற வெறும் கண் துடைப்பு
( உதாரணம்:- மீ த பஸ்ட்...
டூ...
த்ரீ...
இன்பினிட்டி...
)என்று பின்னூட்டங்கள் இட்டுக் கொண்டால் அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் இங்கே வாசகர் பர்ந்துரை தேர்ந்தெடுக்கப் படுகிறதா?ஒரு சில பதிவுகளைத் தவிர பெரும்பாலான பதிவுகளும் சூடான இடுகை மற்றும் வாசகர் பரிந்துரைகளில் வருபவை எல்லாம் அப்படி கருத்து செறிவோ...விஷய ஞானமோ உள்ள பதிவுகளாகத் தெரியவில்லையே?! உண்மையில் பதிவுகள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப் படுகின்றன? இந்த லட்சணத்தில் விருதுகளை வேறு அறிவித்திருக்கிறீர்கள்!விருதுகள் எந்த அடிப்படையில் அளிக்கப் பட இருக்கின்றன என்பது குறித்தும் தெளிவான விளக்கம் எதுவும் இதுநாள் வரையிலும் இல்லை.யாரை ஏமாற்ற இந்த அறிவிப்பு? யாருடைய இடுகை விரைவாக சூடாகிறதோ அவர்களுக்கு கொடுத்து விட்டுப் போவதற்க்கேன் அறிமுகப் பதிவர்களில் இருந்து சில மென் பதிவர்கள் (இவர்கள் யாரையும் திட்டியோ தனி மனித தாக்குதலிலோ ஈடுபடாதவர்கள்) வரை எல்லோரையும் ஏமாற்ற வேண்டும் ?ஐயா தமிழ் மன நிர்வாகிகளே...பழம் பெரும் ...முத்து பெரும் பதிவர்களே...உங்களுக்குத் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்கள் ...புதியவர்களது நல்ல ரசனையான பதிவுகள் பிரபலமாக என்ன தான் செய்து தொலைக்க வேண்டும் என்று??????????????????? இங்கே யோசித்து யோசித்து மண்டை காய்கிறது.ஏன் வெளிப்படையாகவே கேட்கிறேன்....உண்மையைச் சொல்லுங்கள்.
லக்கிலுக்
அதிஷா
கார்க்கி
தாமிரா...
பரிசல்காரன்...
இவர்களது பதிவுகள் மட்டும் தான் சூடாகுமா?
ஏன் இவை மட்டும் தான் ரசனை மிக்க பதிவுகளா?
ஏன் இவர்களை மட்டும் தூக்கி வைத்துக் கொண்டு தமிழ்மணத்தில் கொண்டாடுகிறார்கள்?
இவர்களது பதிவுகள் நன்றாக இருந்தாலும் ....இவர்களை விடவும் அர்த்தமுடன் சில பதிவர்கள் பதிவுகளை இட்டிருக்கின்றனரே !!!நான் ரசித்த அந்தப் பதிவுகளை ஏறக்குறைய எல்லோருமே ரசித்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் கேட்கிறேன்.உதாரணத்திற்கு ;
துளசிதளம்
சித்திரக்கூடம்
அபிஅப்பா
முரண்தொடை
இப்படிப் பல ....
ஏன் இவர்களது பதிவுகள் எல்லாம் சூடான இடுகைகளில் இல்லை ?யாராவது பதில் சொல்லுங்கப்பா ?!

Saturday, December 13, 2008

மீன்...மீன்...மீனோய்...நெய் மீனோய்

நெய் மீன்
வாளை மீன்
விலாங்கு மீன்
வஞ்சிரம் மீன்
இறால் மீன்
சீலா மீன்
சங்கரா மீன்
திருக்கை மீன்
மடவை மீன்
கோலா மீன்
விரால் மீன்
அயிரை மீன்
கெண்டை மீன்
கெளுத்தி மீன்
சுறா மீன்
எனக்குத் தெரிஞ்சது இம்புட்டுத்தேன் ...
அப்பால ...

"வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்.... சென்னாங்குண்ணி கூட்டமெல்லாம் ஊர்கோலம் ..."
பாட்டையும் கூட ரெபெர் பண்ணிப் பாத்துப்புட்டோம் .இந்த ஜாமீன் மட்டும் எங்கன விக்குமுன்னு தெரியலையே .
"விண்மீன் அது வானத்துல நீந்துது
ஜாமீன் எங்கன நீந்துமோ ?! "
ஒண்ணுமில்ல நம்ம வடிவேலு அண்ணாச்சிக்கு ஜாமீனு வேணுமாம் காலைல அல்வா வாசு சன் டி.வி. காமெடி சோவுல சொன்னாரு .அதேன் இங்கிட்டு கேட்டுப் பாக்கலாமேனு வந்துட்டோம்.
இங்கன வாரவுக ஜாமீனு கொண்டுகிட்டு வரலாங்காட்டியும் கருத்து மீனையாச்சும் குத்திட்டு போங்க,

தினம் பல் விளக்குபவர்கள் மட்டும் இதைப் படிங்க இல்லாங்காட்டி போய்க்கினே இருங்க...!!!

தினம் ஆயிரத்து சொச்ச டூத் பேஸ்ட் விளம்பரம் டி.வி ல வருதில்ல...அதப் பார்த்து அதுல வர்ற எதோ ஒரு பேஸ்ட் வாங்கி வீட்ல போட்டுக்கறோம் .இப்ப கேள்வியே ஒரு மாசத்துக்கு நீங்க எத்தினி பேஸ்ட் வாங்கி உங்க பல்ல விளக்கறிங்க? நானும் நிறைய இடத்துல பாத்துபுட்டேன்,
அட என்னா கொடுமைன்னா மாசம் நாலு பேஸ்ட் வாங்கியும் பத்தலையாம் சில வீடுகள்ல?!என்ன தான் பண்றாக ...ஃபேரன் லவ்லிக்கு பதிலா மூஞ்சில தேச்சுக்கறாங்கலோனு பீதியாவுது. இல்லாங்காட்டி டியுப்ள விக்கிற சாக்லேட்டுனு தின்னே தீக்குராங்களோ...? என்ன தான் பண்றாகன்னு research பண்ணிப் பார்த்தாக்க அப்புறம் தெரிஞ்சது சூட்ச்சுமம் !
பேஸ்ட் கம்பெனிக்காரன் விளம்பரம் பார்த்து பேஸ்ட் வாங்கற நம்ம மன்னாரு மொக்கைச் சாமிகள் அதுல இலவசமா தர்ற பிரஷ் நீளத்துக்கு பேஸ்ட்டைப் பிதுக்கி தினம் தேய்க்கிறான் பல்லு .ஆனாலும் நாத்தம் மட்டும் போகல ?!அண்ணன்களே...தம்பிகளே....அக்காக்களே...தங்கச்சிகளே ...பல் விளக்குவான்(அதாங்க பிரஷ்!!!) இருக்குல்ல அதுல சும்மா இத்தனூண்டு பட்டாணி சைஸ் ல பேஸ்ட்டைப் பிதுக்கித் தேச்சா போதும் .பல்லு விளங்கிரும்.இது நான் சொல்லல ...பல் மருத்துவர்கள் சொன்னது.
எல்லாரும் தெரிஞ்சிக்கட்டுமே நு இங்கன கூவினோம்.
அப்புறம் வரட்டுமா...நாளைக்குப் பார்போம்.
எத்தினி பேரு நான் சொன்னத கேட்ருக்காகனு ....