Saturday, November 29, 2008

பூந்தளிரும்...பாலமித்ராவும்...அம்புலிமாமாவும்...ராணிகாமிக்சும் இப்போது வருவதில்லையா?

பூந்தளிரும்...பாலமித்ராவும்...அம்புலிமாமாவும்...ராணி காமிக்சும் இப்போது வருவதில்லையோ ? ரொம்ப நாள் ஆகிறது அதெல்லாம் வாசித்து!

முன்னெல்லாம் பாட்டி ஊருக்குப் போய்விட்டு திரும்பி வரும்போது மூன்று மணி நேரமாக பயணநேரம் வாட்டி எடுக்கும் .அதன் வெறுமையை தீர்க்க மேற்சொன்ன புத்தகங்களே எனக்கும் என் தங்கைக்கும் துணையாகிப் போன நாட்களின் சுகம் இன்றும் ஞாபகத்தில் இனிக்கிறது.

அதே புத்தகங்கள் இப்போது எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை?கிடைக்குமா...கிடைக்காதா என்றும் தெரியவில்லை...ஆனாலும் அது ஒரு காலம்!பொன்னான தருணங்கள் என்று கூட சொல்லிக் கொள்ளலாம் .என் மகளுக்காக அந்தப் புத்தகங்கள் இன்று கிடைக்குமா என்று தேடத் தோன்றுகிறது...?!அதுவே அவற்றின் வெற்றி.

பாலமித்ராவில் வரும் பட்டி விக்ரமாதித்தன் கதை...

பூந்தளிரில் வரும் கபீஷ் என்ற ஒரு குரங்குக் கதை...

சம்பக் என்ற முதலை ...

பெரும்பாலும் பறவைகளையோ...அல்லது விலங்குகளையோ மட்டுமே ஹீரோ ...ஹீரோயின்களாக தாங்கி வரும் இந்தக் கதைகள் படிக்க மிகச் சுவையானவை(அந்த வயதில் ...! சொன்னேன்).

ராணி காமிக்ஸில் வரும் "மாயாவி" தொடர் ..."ஜேம்ஸ்பாண்ட்" தொடர் இன்னும் நிறைய சொல்லாம் .

சிலது இப்போது மறந்து போயிருக்கலாம்;

அப்புறம் இருக்கவே இருக்கிறது நமது "சிறுவர்மலர்"சிறுவர்மலர் எப்போதடா வரும் என்று காத்திருந்து முதல் ஆளாய் படித்து முடிக்க எங்கள் வீட்டில் எப்போதும் எனக்கும்...என் தங்கைக்கும் சண்டை வரும் .

வெள்ளிக்கிழமை மட்டும் காலை ஐந்து மணிக்கே விளிப்புத் தட்டி விடும்...மாற்ற நாட்களெல்லாம் ஆறு ஆறரை ஏன் சமயத்தில் எழு கூட ஆகலாம் ஒன்பது மணி பள்ளிக்கு எழு மணிக்கு எழுந்தால் போதாதா என்ன? உள்ளூர் பள்ளி தானே என்ற சமாதானம் எல்லாம் வெள்ளியன்று மட்டும் கிடையாது ...!

சிறுவர்மலர் அட்டைப்படத்தைப் பார்த்து அதில் தாமரைப் பூவோ என்னவோ படம் இருக்கும் லோகோ போல அதைப் பார்த்தால் அப்போது அவ்வளவு சந்தோசம் வரும் ...

என் மகளுக்கு தினமும் படுக்கைக்குச் செல்லும் முன் ஏதாவது ஒரு நீதிக் கதை சொல்வதை இப்போதெல்லாம் வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன்.

அது ஆமை முயல் கதையோ...

காகமும் ,நரியும் கதையோ...

நான்கு பசுக்கள் கதையோ...

புறா...எறும்புக் கதையோ...

இல்லாவிட்டால் புராணக் கதைகளோ ...கற்பனை விரவிய மாயாஜாலக் கதைகளோ ...எதுவோ ஒன்று ஒவ்வொரு இரவும் தூங்கப் போகும் முன் கட்டாயமாக்கி இருக்கிறேன் ...;

அவளுடைய கற்பனை வளத்தை வளர்க்கவோ...பல்முனை அறிவைத் தூண்டவோ எதுக்காக என்றெல்லாம் என்னையே நான் கேள்வி எதுவும் கேட்டுக் கொள்ளாமல் தினம் தினம் ஒரு கதை சொல்லிக் கொண்டு இருக்கிறேன் .இப்போது நான் மறந்தாலும் அவள் விடுவதில்லை ...இன்னைக்கு என்ன ஸ்டோரிம்மா? என்கிறாள் மறக்காமல் .இது தான் நான் எதிர்பார்த்தது .அதுவரை சந்தோசமாய் உணர்கிறேன்.

இப்போதைய குழந்தைகளுக்கு புத்தகங்களுக்கு பஞ்சம் இல்லை தான் ...!!!சந்தையில் கிடைக்காத புத்தகங்களா என்ன? பணம் தான் வேண்டும் கைக் கொள்ளாமல் புத்தகங்களை அள்ளிக் கொள்ளலாம்,அதென்னவோ என்ன இருந்தாலும் அந்தக் காலம் போல வருமா ?என்ற எண்ணம் மட்டும் போக மாட்டேன் என்கிறது .

எனக்குத்தான் முதலில்...இல்லை எனக்கு தான் முதலில் என்று வீட்டில் நாலைந்து பேரோடு சண்டை போட்டு ...போட்டியில் வென்று படிக்கும் சுகமே அலாதி தானே!!!இன்றைய குழந்தைகள் ஆளுக்கு ஒன்றல்லவா(எதுவானாலும் அவரவர்க்கென்று தனித் தனியாக) கேட்கின்றன!!!

எது எப்படியோ ?எனக்குத் தெரிந்தவரை கதைகளை வாசித்துக் காட்டியோ அல்லது கற்பனையாக பொருத்தமானவற்றை இட்டுக் கட்டிச் சொல்லியோ எப்படியோ ஒரு வகையில் என் குழந்தையின் சிந்திக்கும் திறனை அதிகரிக்க வேண்டுமென்று உணர்ந்ததால் இதையெல்லாம் செய்து வருகிறேன் .

இன்றைய டவுட் :-

பூந்தளிர்

பாலமித்ரா

அம்புலி மாமா

கோகுலம்

ராணி காமிக்ஸ்

இந்தப் புத்தகங்கள் எல்லாம் இப்போதும் வருகின்றனவா ?எங்கே இந்தப் புத்தகங்கள் கிடைக்கும் என்று தெரிந்த வலைப் பதிவர்கள் தயவு செய்து பின்னூட்டத்தில் கூறுங்கள்.

2 comments:

த.அகிலன் said...

கோகுலமும்,அம்புலிமாமாவும் இன்னமும் வருகிறது என்று நினைக்கிறேன்..ஆமாம் ரத்னபாலா என்று ஒரு புத்தகம் வந்திச்சே படிச்சிருக்கீகளா?

karthiga said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அகிலன் ,
ரத்னபாலாவை மறந்து விடவில்லை ,சின்னக் குழப்பம் தான் காரணம்...ரத்னபாலாவா அல்லது ரத்னமாலாவா என்று சந்தேகம் இருந்தது எதற்கு குழப்பம் என்று தான் எழுதாமல் விட்டு விட்டேன் .ஞாபகப் படுத்தியதற்கு நன்றி
தொடர்ந்து வாருங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.