சட்டென்று மூச்சடைத்ததைப் போல ஆயிற்று...
திக்...திக் என்று நெஞ்சு அடித்துக் கொண்டது !
சும்மாவா?
இப்போது என்ன செய்யலாம் ?
திடு திப்பென்று யோசிக்கக் கூட முடியாததைப் போல ஒரு சில நொடிகள் மூளை ஸ்தம்பித்துப் போனது.
மயக்கம் வருவதைப் போலக் கூட இருந்தது .
வெளியே ஹாலில் அப்பா யாருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டே அலுவலகத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
அம்மாவின் சத்தத்தைக் காணோம்...ஒரு வேலை சாப்பிட்டுக் கொண்டிருக்கலாம் !
இருவரும் இன்னும் பத்துப் பதினைந்து வினாடிகளில் பறந்து விடுவார்கள் அவரவர் வேலைக்காக ?!பிறகு மாலை மங்கிய பின்தான் கூடடைவது வழக்கம்.
அது தினம் தினம் நடப்பது தானே!அதைப் பற்றி இப்போது என்ன?
என் கஷ்டம் எனக்கு சீக்கிரமாக யோசித்து ஏதாவது செய்தே ஆக வேண்டும் உடனே...ஆமாம் ...உடனே!!!
கொஞ்சம் கூட நேரமே இல்லை .
ஊரிலிருந்து பாட்டி வேறு இன்றைக்குப் பார்த்தா இங்கு வரவேண்டும்?
நல்ல வேலை இப்போது இங்கே இல்லை ....சித்தப்பா வீடு வரை போயிருக்கிறாள்...பாட்டி வருவதற்கு முன் ஏதாவது செய்து என் திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டும்...வேறு வழியே இல்லை !
இன்றைக்கு காலையில் அலாரம் வைத்து எழும்போது கூட இப்படி எல்லாம் எனக்கு நடக்கும் என்று நான் நினைத்துக் கூடபபார்க்கவில்லை .
கார்த்தி ....கார்த்தி அப்பா தான் ...புறப்பட்டு விட்டார்கள் போல் இருக்கிறதே?அடக் கடவுளே!!!உடனே ...உடனே ஏதாவது செய்ய வேண்டுமே ?!
அம்மாவின் குரல் ...
இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க உள்ள?
வெளிய வா ...நான் பாத்ரூம் போகணும்அடராமா இதென்ன புது தலைவலி!!!உட்கார்ந்த நிலையில் தான் இருந்தேன்;
இன்னும் டாய்லட் பீங்கானின் மேல் உட்கார்ந்தவாறு தான் இத்தனையும் இவ்வளவு நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன் .
அம்மா மறுபடி ஒருமுறை கொஞ்சம் பலமாகக் கதவைத் தட்டினார்.
இனி வேறு வழியே இல்லை ."இன்னும் உள்ளே போய் இருக்க கூடாது முருகா " என்று வேண்டிக் கொண்டு எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டு இடது கையை உள்ளே விட்டு தேடினேன் பீங்கானின் வழவழப்பு அருவருப்பாகத் தான் இருக்கும் என்ன செய்ய?
பொறுத்துக் கொண்டு இன்னும்...கொஞ்சம் உள்ளே...உள்ளே விட்டு கைக்குத் தட்டுப் பட்டு விட வேண்டும் என் அப்பனே முருகா என்று விடாமல் முணுமுணுத்தவாறு மனதை ஒருமுகப் படுத்தி விரல்களால் உள்ளே அலசினேன்
கவனமாக...மிக...மிகக் கவனமாக மெல்ல விரல்களால் அளந்தேன் .சுண்டு விரலில் தான் முதலில் தட்டுப் பட்டது கொக்கி ;
இதற்குள் அப்பா...அம்மா இருவரும் சேர்ந்து குரல் கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள் வெளியில்;
அவர்கள் அவசரம் அவர்களுக்கு !!!
எப்படித் தெரியும் என் அவஸ்தை அவர்களுக்கு ?
டாய்லட் பீங்கானில் அமர்ந்த முதல் நொடி வரை எனக்கே தெரியாதே!எப்படியோ சுண்டு விரலில் இடித்தது இனி ஆட்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் நடுவில் வந்து விடாதா என்ன ? என்று தான் நான் விடாது முனைந்து கொண்டிருந்தேன் .
பாட்டியின் குரல் வேறு இப்போ கதவுக்குப் பின்னால் கேட்கிறதே...!
வந்து விடும் போல் இருக்கிறதே...நாடு விரலில் டாலரின் கீழ் முனை நழுவியது .
இன்னும் முயற்சிக்கலாம் ...கட்டாயம் கைக்கு சிக்கும் பெரும் முனைப்போடு இன்னும் விரல்களை விட்டு பொறுமையாக அலைந்தேன்...
அதற்குள் வெளியே அப்பாவின் குரல் உச்சஸ்தாயி அடைந்திருந்தது .
பாட்டி வேறு கூட சேர்ந்து விட்டது உள்ளிருந்தே அனுமானிக்க முடிந்தது டாலர் மட்டும் கைக்கு சிக்கட்டும் வெளியில் போய் வைத்துக் கொள்ளலாம் கச்சேரியை !
பிள்ளையாரப்பா ...எங்கம்மா ஸ்கூலுக்கு லேட் ஆகுது சீக்கிரம் ஹெல்ப் பண்ணேன் ..ப்ளீஸ் ...!
ஒருவழியாய் கொக்கி வசமாக கட்டை விரலுக்கும் சுட்டு விரலுக்கும் நடுவில் வந்து மாட்டியது .
சரட்டென்று வெளியில் இழுத்தேன் இடது கையை அத்தனை மலத்தோடும்...!!!வேறென்ன இருக்கும் டாய்லட் பீங்கான் கோப்பைக்குள்?
மடமடவென்று சுத்தம் பார்க்காமல் கைகளைக் கழுவினேன் ...
அம்மா கத்த..
.அப்பா கத்த...
பாட்டி கத்த...
ஒருவழியாய் நிதானமாய் சோப்பெல்லாம் போட்டுக் கழுவி டாலர் நாறுகிறதா என்று சோதித்து பிறகு கடைசியில் கதவைத் திறந்தேன் .மூவர் கூட்டணி என் மீது விட்டால் பாய்ந்து விட்டிருப்பார்கள்
பெரிய சாகஷியைப் போல ஒரு லுக் விட்டேன் நான் ...அதான் டாலர் கிடைத்து விட்டதே ...!!!கடுகடுவென்று என் அசமந்தத்தை சாடிக் கொண்டே உள்ளே நுழையப் போன அம்மாவிடம் திக்காமல் திணறாமல் நடந்ததைச் சொன்னேன்.
கடுவன் பூனைகளாய் மாறிப் போன மூவரும் குபீரென்று சிரித்து விட்டார்கள் .
டாலர் கிடைக்காமல் உள்ளே போயிருந்தால் இப்படியெல்லாம் சிரிப்பார்களா என்ன?
எல்லாம் டாலர் கிடைத்த மாயம்.
தங்கமய்யா தங்கம்!!!முக்கால் சவரன் தங்கத்தில் அழகான இதயம் வடிவ தங்க டாலர் ஆச்சுதே!!!
ஆள் மாற்றி ஆள் பாத்ரூம் போயிருந்தால் டாலர் இந்நேரம் செப்டிக் டாங்கில் அல்லவா கேட்பாரற்றுக் கிடக்கும் ...முக்கால் சவரன் !!!மூக்கால் அழுவார் அப்பா ...அம்மா கூடத் தான் ...ஏன் நானும் தான் !ஒரு வழியாய் கையில் சிக்கி விட்டது .
2 comments:
நல்ல வேளை கிடைச்சிடுச்சு!
thankx for ur comments and coming.
come again and again like chennai rain.
Post a Comment