Friday, December 11, 2009
விளம்பரம் ...
எனக்கு நெனவு தெரிஞ்சி மறக்காம இருக்க விளம்பரங்களை எல்லாம் சொல்லத் தானே இந்தப் பதிவே...
மொதோ மொதோ ஞாபகம் வாறது எதுன்னா?
நம்ம ரெடி மெனி ஷாப் விளம்பரமுங்க (மணி பர்ஸ் மாதிரி ஒரு பொம்மை ரெடி மேனி ஷாப் ரெடி மனி ஷாப்னு சொல்லிக்கிட்டு பறந்து பறந்து வரும் பாருங்க அதாங்க...
அப்புறமாட்டு கேதான் பேன் ...உஷா பேன் ...கூடவே சொல்லாம இருக்க முடியுமா "ஓரியன்ட் பேன் " விளம்பரமுங்க. இப்பலாம் எ.சி ..எ.சி ன்னு அலையறமுள்ள அன்னிக்கெல்லாம் பேன் வாங்கறவங்க ரொம்ப ஜாஸ்திங்க. அதான் இம்புட்டு பேன் விளம்பரமாட்டு இருக்கும்னு இப்ப நினைசுக்குவேனுங்க நானு.
ப்ராமிஸ் டூத் பேஸ்ட் விளம்பரம்.
ரீகல் சொட்டு நீலம் "சொட்டு நீலம் டோய் ...ரீகல் சொட்டு நீலம் டோய் "(மறந்துற முடியுங்களா?!)
உட்வார்ட்ஸ் கிரேப் வாடர் விளம்பரம் (" நான் குழந்தயா இருக்கச்சே எங்கம்மா இத தான் கொடுத்தாங்க")
அரவிந்த சாமி வருவாரே அந்த லியோ காப்பி விளம்பரம் ...சாலிடர் டி.வி விளம்பரத்துக்கு கூட இவர் நடிகை கீதா கூட வந்ததா ஞாபகமிருக்கு பாருங்க எனக்கு.
மனோரமா வர்ற போலியோ விளம்பரம்...
ராலே டயர்ஸ் விளம்பரம் ...
ஸ்ரீ தேவி வர்ற "சூர்யா பல்பு விளம்பரம்"
அன்னிக்கெல்லாம் இந்த மிளகாப் பொடி விளம்பரமெல்லாம் (சக்தி மசாலா...ஆச்சி மசாலா)பார்த்தா மாதிரி ஞாபகத்துல இல்லைங்க.இதுகள்லாம் இப்பம் ஒரு பத்து இருபது வருஷம் மின்னே வந்ததாக்கும். அன்னைக்கு பிரஸ்டீஜ் குக்கர் விளம்பரம் பார்த்த ஞாபகம் கூட அம்புட்டுக்கு இல்லைன்னு தான் சொல்லணும் .
ஒனிடா டி.வி விளம்பரம் ரொம்ப நாளாவே இருக்குதுங்க(தலைல கொம்பு மொளைச்ச வால் நீண்ட மனுஷன் ! ஒருத்தன் வருவானே( அண்டை வீட்டுக் காரர்கள் பொறாமைப் படடடும்ணு எதையோ சொல்லிட்டுப் போவான்)
சுமங்கலி ஷாம்பூ விளம்பரம் பார்த்திருக்கேன்.
சிக் ஷாம்பூ விளம்பரம் ..வெல்வெட் விளம்பரம்...ரெக்சோனா சோப்பு ...லக்ஸ் சோப்பு விளம்பரம்...ஐநூத்தி ஒன்னு துவைக்கற சோப்பு விளம்பரம்.வீல் சோப்பு .
எல்லாத்தையும் விட முக்கியாமான சங்கதி ஒன்னை சொல்ல விட்டுப் போச்சு பாருங்க.இதானுங்க ரொம்ப ரொம்ப பேமஸ் .
பி.டி.உஷா காடு மேடெல்லாம் ஓடி ஓடி தேடற கண்ணன் தேவன் டீ விளம்பரமும் ,
நம்ம ஊர் உசிலை மணி பிரமாதமா "பேஷ்..பேஷ் சொல்ற நரசூஸ் காப்பி" விளம்பரமும் இல்லாம அன்னைக்கு டி.வி ல ஒரு மணி நேரம் கழிஞ்சிடக் கூடுமா என்ன?
அது ஒரு காலம் இப்பவெல்லாம் அந்த விளம்பரங்களை பார்க்க முடியலை .இன்னிக்கு வர்ற விளம்பரங்களும் நல்லாத் தான் இருக்கு கண்ணுக்கு குளு குளுன்னு ,சில விளம்பரம் என்னவோ போர் அடிக்குதுங்க மறுக்கா பார்க்க,அன்னைக்கு அப்படி எந்த விளம்பரமும் போர் அடிச்சா மாதிரி தெரிலங்க.
இங்கன நான் கிறுக்குனத யாருனாச்சும் படிச்சிங்கன்னா ரெண்டு வார்த்த உங்களுக்குப் புடிச்ச விளம்பரம் எதுன்னும் சொல்லி போட்டு போயிருங்க .என்னங்க நான் சொல்றது ? சரி தானுங்களே...?
Friday, April 17, 2009
நானும் கட்சி ஆரம்பிக்கப் போறேன் ...ஓட்டுப் போடுங்க மக்களே
இப்போ விஷயம் என்னனா ?
அதென்னங்க இங்க நம்ம தங்கத் தமிழ் நாட்டுல மட்டும் எப்போ பாருங்க கட்சி ஆரம்பிக்கிறதெல்லாம் கடந்த சில வருஷமா நடிகருங்க மட்டும்னே ஆயிப் போச்சு ?! என்ன கொடுமைங்க இது ? யாரெல்லாம் அப்படி ஆரம்பிச்சிருக்காங்கனு பாருங்க ?
முதல்ல நம்ம விஜயகாந்து அண்ணன்
பின்ன நம்ம கார்த்திக்கு கூட கொஞ்ச நாலு பார்வர்டு பிளாக்குன்னு ஒரு கட்சிக்கு தலைவரா இருந்து அந்தக் கட்சியவே இப்போ காணாம அடிசிட்டாராக்கும்
அப்புறம் நம்ம நாட்டாமை கூட ச.ம.க ஆரம்பிச்சாருங்க .சித்தி ஓட்டு அவருக்குத்தான் சந்தேகமில்லை ...அதுக்குன்னு எல்லாருமே கண்ண மூடிட்டு ஓட்டுப் போட்டு நம்மள முதலமைச்சரு நாற்காலில உட்கார வச்சிபிடுவாகனு எப்பிடித்தேன் இவுகளாம் நம்பி வாராகளோ !!!
பிரபு கூட காங்கிரசுல சேர்ந்து நாட்டுக்கு சேவை பண்ணப் போறாராமே! சொல்லிக்கிட்டே இருக்காக இன்னும் செயல்ல இறங்கலை போல இருக்கு !!!(அய்யன் கட்சி ஆரம்பிச்சு பட்ட அடி ஞாபகமிருக்கு போல இருக்கு புள்ளைங்களுக்கும்!)
இப்ப விஜய் வேற கட்சி ஆரம்பிக்கப் போறாராம் ,பத்திரிக்கைகாரவுக பக்கம் பக்கமா போட்டுக்கறாக...நடிகரு முதலமைச்சரு ஆகக் கூடாதுன்னு யாராச்சும் சொல்லுவாகளா என்ன? வாங்கண்ணே...நீங்களும் வாங்க ...வந்து இந்த பந்தியில குந்துங்க ,வடை கிடைச்சா வடை...இல்லாங்காட்டி பாயாசம் !!!
எப்படியோ ஓட்டைப் பிரிச்சா சரிதான்
அதான நம்ம முன்னாள் தலைவர்களோட ஆசை ;
இந்நாள் தலைவர்களே நீங்களும் பயிற்சி தான எடுத்துகறிங்க அதனால சோர்வு வேண்டாம் ,சீக்கிரமே ...இருக்கறது ஆறரைக் கோடி ஜனம் இதுல ஓட்டுப் போடப் போகாதவுக சோத்தையும் சேர்த்துத் திங்க ஆளிருக்கும் எல்லா ஓட்டுச் சாவடியிலயும்...பின்ன என்ன செத்தவங்க ஓட்டு சாகாதவன் ஓட்டு எல்லாத்தையும் போட்டு இன்னொருக்கா தலைவரையோ இல்லனா தலைவியையோ ஜெயிக்க வச்சிப் போட்டு வாங்கித் தந்த பிரியாணியை ஒரு கட்டு கட்டிட்டு மத்தியானம் வீட்டுக்கு வந்து குப்புறப் படுத்து குறட்டை விட்டுத் தூங்க தான் போறோம் .
திடீர்னு தான் இப்படி ஒரு யோசனை ஓடுச்சு மனசுக்குள்ள ...சாப்பிட்டு மத்தியானம் சாம்பார் வாசம் கைல மணக்க மோந்து பார்த்துகிட்டு திண்ணைல உட்க்கார்ந்தனா அப்படியே சிந்தனை இப்பிடிக்காப் போச்சு ...
என்னாங்கறிங்களா ?
அதொண்ணுமில்லை இந்த நடிகருக கட்சி ஆரம்பிக்கிறதும் ...வாய்ஸ் கொடுக்கிறதும் தன்னை ..தன் வசதி ..வாய்ப்பை ...தன் பாதுகாப்பை பலப் படுத்தத்திக்கத் தானே தவிர ! சும்மாங்காட்டி நாட்டுக்கு சேவை பண்ணுரதுக்கோசரம் இல்லைங்குது புத்தி ..
சரி தானுங்களே!
Sunday, February 1, 2009
என்றென்றும் கிளி கிளியே ...!?
தொடுவானக் கனவுகளை
துரத்திக் கொண்டு
ஓடும்
ஆசை
மிகுந்திருந்தும்
வட்டத்துக்குள்
ஒரு வட்டத்துக்குள்
மட்டுமே
சுழலும் வாழ்க்கை ...!
கூண்டில் அடைபடினும்
தன்னிஷ்டப் படி
பறந்து திரியினும்
கிளி கிளியே !
பருந்துகளின் பார்வையில்
என்றென்றும்
கிளி கிளியே ...!?
Wednesday, January 28, 2009
அவள் மனைவி !!!
நெற்றிக் கண்
திறப்பினும்
குற்றம் குற்றமே!
குற்றம் பார்க்கில்
சுற்றம் இல்லை !
எதை விடுப்பது?
எதை எடுப்பது ?!
தொடர்பு எல்லைக்கு அப்பால்
போகத் துணிந்த
கணவரை எதிர் நோக்கி
உதடுகளைப்
பற்களால் அழுத்திக் கொண்டும்
விரல்களால்
நம்பர்களை அழுத்திக் கொண்டும்
மறுபடி
மறுபடி...
மறுபடியும்
காத்திருப்பாள்
அவள்
மனைவி !!!
Wednesday, December 17, 2008
அரை ஆழாக்கு நைஸ் புழுதி...
"ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும்" இந்தப் பழமொழியே சாட்சி ;
"புரட்டாசியும் ஐப்பசியும்" அடைமழைக் காலங்கள் தான்,
"மார்கழி" குளிர் காலம்,கூதிர் காலம் பனிக் காலம் இப்படி எப்படி சொன்னாலும் மார்கழி குளிர் தானே மனசில் நிற்கும்.
பருவ நிலை மாற்றமோ என்னவோ? ஆடி மாதத்தில் எல்லாம் இப்போது காற்று கம்மியாகி விட்டதைப் போலொரு பிரமை?! ஆடியை விட மார்கழி தொடக்கம் முதலே அள்ளி அள்ளி வீசுகிறது காற்று (குப்பை...கூலம்...புழுதி வித்யாசமெல்லாம் வாடைக் காற்றுக்கு இல்லை போலும்!).
காற்றாடி (பட்டம் என்றும் சொல்லலாம்!) விடும் பையன்கள் மொட்டை மாடிக்குப் போகவே வேண்டாம்...முச்சந்தியில் நின்று கொண்டு தாராளமாக விடலாம்.பிய்த்துக் கொண்டு பறக்கும் காற்றாடி நூலோடு!அது பறந்து போய் யார் கழுத்தைச் சுற்றினால் தான் காற்றுக்கு என்ன வந்தது? கன ஜோராக வீசிக்கொண்டு இருக்கும் அது பாட்டுக்கு மார்கழி ,தை என்று விவஸ்தை எதுவுமின்றி!
இந்த மார்கழியில் தானா அரைப் பரீட்சை வைத்து லீவு விடுவது? இந்தப் பள்ளிக்கூட வாத்தியார்களுக்கு கொஞ்சமேனும் பெற்றோரின் கஷ்ட நஷ்டம் புரிவதே இல்லை எந்தக் காலத்திலும் ...அவர்கள் பாட்டுக்கு பரீட்சை என்று ஒன்றை வைத்து வருசத்துக்கு மூன்று தடவையாச்சும் லீவு விட்டு விடுகிறார்கள்?!
என்னாத்திற்கு இந்த லீவு என்கிறார்கள் பெற்றோர்கள்? பிள்ளைகள் வருஷம் முழுக்க நன்றாய் படிக்கட்டுமே! அதில் என்ன குடி முழுகி விடும்? இது சாத்தியமே இல்லை என்பது தெரியும் ."வாண்டுகளா ...வானரங்களா"...என்று சந்தேகம் வரவைப்பதைப் போல சில பிள்ளைகள் சேஷ்டைகள் செய்வதால் எல்லாப் பிள்ளைகளுக்கும் லீவு விட்டு விடுவதாக எங்கள் வீட்டு வாண்டு ஒருமுறை சொல்லியதுண்டு!!!
லீவு விடும் பழக்கத்தை யாராலும் மாற்றவே முடியாது தான் .குறைந்த பட்சம் இந்தக் காற்றுக் காலாத்திலாவது லீவேவிடக்கூடாது...ஐயோடா...இந்தக் குட்டி குறுமாணிகள் எல்லாம் தெருப் புழுதியில் தான் விழுந்து கும்மாலமடிக்கின்றன.உடம்புக்கு எது வேண்டுமானாலும் வந்து விடாதோ? சதா புழுதியில் புரண்டு ஆடினால்?
அட வீட்டிற்குள் அடைத்து வைக்கலாமென்றாலும் ஒரு பிரஜோஜனமும் இல்லை ?! தினப் படி ஐந்து முறை வீட்டை ஒழுங்கு பண்ணி கூட்டிப் பெருக்கி கழுவினாலும் தாராளமாய் ஒவ்வொரு தடவையும் அரை ஆழாக்கு நைஸ் புழுதி கிடைக்கிறது குப்பை வழித்தெடுக்கும்
பிளாஸ்டிக் முறத்தில்.
இந்த விஞ்சானிகள் எல்லாம் என்னெனவோ கண்டுபிடிக்கிறார்களே !...இந்த நைஸ் புழுதியை வைத்து ஆராய்ச்சி கீராய்ச்சி எதுவோ செய்து ஏதாவது கண்டு பிடித்தால் புண்ணியமாய் போகாதோ?
பாவம் காற்றுக்கு வாய் இருந்தால் அது கூட ஒரு பாட்டம் அழுது விட்டிருக்கும் புழுதியை அது வாரிக் கொண்டு வந்து வீட்டுக்குள்ளும் ...வீட்டடியிலும் போடப் போட நாமும் சளைக்காமல் கூட்டிப்பெருக்கி முறத்தில் அள்ளி அள்ளி அள்ளி மறுபடி தெருவிலேயே வீசுகிறோமே? இதைப் பார்த்துப் பார்த்து காணச் சகியாமல் அந்தக் காற்றும் கூட வாய் இருந்தால் கதறி அழக் கூடும் தான்!!!
கணவர்கள் தங்கள் மனைவிகளின் மேல் உள்ள கோபத்தை தீர்த்துக் கொள்ள தாராளமாக இந்த மாதத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நைஸாகப் பேசி பேசியே அவர்களை குறைந்த பட்சம் ஒரு வாரமேனும் அம்மா வீட்டுக்கு அனுப்பி விட்டு .துல்லியமாக அவர்கள் அம்மா வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு(மனைவிகளுக்கு புருஷன் வீடு புகுந்த வீடு தானே!!!) வரும் போது நீங்கள் ஆபிஸ் டூர் என்று ஓடியே போய் விடலாம் ?!
புழுதி அடைந்து போய் பாழடைந்த பங்களா எபெக்டில் இருக்கும் வீட்டை சுத்தம் செய்வது பெரிய தண்டனை தான் மனைவிகளைக் கேட்டுப் பார்க்கலாம் விவரம் தெரியாதவர்கள்.இந்த நைஸ் புழுதி இருக்கிறதே அது ஒரு சாபக் கேடு என்கிறார்கள் பெண்கள் எல்லோருமே ஒட்டுமொத்தமாக.
இதனால் என்னென்ன வரலாம் என்று ஒரு லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறார்கள் அவர்கள்,
ஆஸ்த்துமா
வறட்டு இருமல்
தொடர் தும்மல்
மூச்சுத் திணறல்
மூக்கடைப்பு
அப்புறம்...அப்புறம்...
கண்ணீர் !!!(கண்ணில் புழுதி விழுந்தாலும் கண்ணீர் வரும் தானே?!)அழுகை !!!( எவ்வளவு பெருக்கினாலும் தீராத புழுதிப் படலம் தட்டுப் பட்டால் அழுகையும் வரும் தானே!?)
சண்டை !!!(நைஸ் புழுதி பெருக்கிப் பெருக்கியே ஆய்ந்து ஓய்ந்து போய் உட்கார நினைத்தால் அந்நேரம் கணவரோ...பிள்ளைகளோ ஏதாவது கேட்டால் கட்டாயம் சண்டை வரும் தானே?!)
ச்சே...ச்சே...இந்த மார்கழியில் இந்த நைஸ் புழுதியால் வந்த வினையைப் பாருங்கள் எவ்வளவு நீளமான கட்டுரை எழுத வேண்டியதாகிப் போச்சு !!!எல்லாம் புழுதி மயம்!!!
பாத்திரம்...பண்டம்...உடுப்புகள்...கட்டில்....பீரோ ... கண்ணாடி ...சுவர் ...தரை எங்கும் புழுதி மயம்.
எனக்கு ஒரே ஆயாசமாய் இருக்கிறதப்பா !
அப்போ உங்களுக்கு ?எப்படி இருக்கும் என்று எழுதுங்கள் பின்னூட்டத்தில் .
புரட்டாசி கோவிந்தாக்கள்,ஆடி ஆத்தாக்கள்,மற்றும் பிச்சைக் காரர்கள்
பெருந்தொல்லைகள்:-
வாழ்க்கையில் பெரிய..பெரிய தொல்லைகள் எல்லாம் எப்படி வந்து சேருகின்றன என்று பாருங்கள்.தொல்லை என்பதெல்லாம் வெறும் வார்த்தை ...அது பெரிய கொடுமை என்றும் சொல்லத் தகும்.
உங்கள் குடியிருப்பில் உங்கள் வீடே முதல் வீடா? பிடித்தது ஏழரைச் சனி !!!போஸ்ட் மேனில் இருந்து கறிகாய் விற்பவர் வரை ungal மண்டையில் தான் முதல் மணி அடிக்கக் கூடும் ! கூரியர் காரர்களையும் சும்மா சொல்லக் கூடாது . அடுத்த வீட்டில் ஆளில்லா விட்டால் உங்கள் வீட்டு காலிங் பெல்லே எல்லோருக்கும் இதம் தரும் இன்னிசை ஆகக் கூடும்.
புரட்டாசியில் "கோவிந்தாக்கள் சங்கப் பிரபலங்கள்
"ஆடியில் ..."ஆத்தாவுக்கு கூழ் ஊத்துவோர் சங்கக் கண்மணிகள்"
வீட்டுக்குப் பக்கத்தில் "பிள்ளையார்...அம்மன்...நாகாத்தம்மன்...முருகன்...இன்ன பிற தெய்வங்கள் குடியிருந்தால்...திருவிழாக் காலங்களில் உங்கள் பர்ஸ் கதறிக் கொண்டு தினம் அழலாம்.அப்படி ஒரு பெருங்க் (கொள்ளைக்) கூட்டம் முற்றுகை இடும் முதல் வீட்டில் முதல் முதலாய்.
பிச்சைக் காரர்கள் சங்கம் வைத்து கூட்டம் போட்டுத் தண்டிக்க நினைத்தால் முதலிடம் முதல் வீட்டுக் காரர்களுக்கே?!
"பாழாப் போன வீடு...நாசமாப் போக...கூச்ச ...நாச்சமே இல்ல எட்டி நின்னு எட்டணா போடறான் அந்த முத வீட்டுக் முட்டாக் கபோதி ..." திட்டுக்கள் தாராளமாய் விழலாம் என்றேனும் நீங்கள் அச்சங்க கூட்டத்தில் சிறப்பு விருந்தினராய் கலந்த கொள்ள வாய்ப்பிருப்பின்!!!
இது மட்டுமா?
விற்ப்பனை பிரதிநிதிகளின் வயிற்றெரிச்சல் வேறு?
"எப்போ போனாலும் லேசா தொறந்து எட்டிப் பார்த்துட்டு வேணாம் போன்னு வெரட்டுறான் அந்த வெங்கம் பய ..." இவனப் போயி எவன் குடி வச்சான் முத வீட்டுல? சனி முகத்துல முழிச்ச மாதிரி தான் ஒன்னும் போனியாகள இன்னைக்கும்"
இதெல்லாம் சும்மா சாம்பிளுக்கு தான் ...
அனுபவம் இருந்தா நீங்களும் கொட்டுங்க உங்க மான அவமானத்தை .
குறிப்பு:- முதல் வீட்டுக் குடித்தனக்காரராகவோ அல்லது அப்படிப் பட்ட அனுபவம் வாய்ந்தவராகவோ இருத்தல் அவசியம் .
பஸ் ஸ்டாண்ட் பெண்கள்
ஏதோ ஒரு பேருந்து நிறுத்தத்தில் தான் பார்த்தேன் ஒருநாள்.அந்த நாளே முதல் நாள்!அவள் என்னைப் பார்த்தாளா இல்லையா என்பது இன்றும் எனக்குத் தெரியாது.
நான் அவளைப் பார்த்தேன் ...
நான் மட்டுமே அவளைப் பார்த்தேன் என்பதற்கில்லை...!
அந்தப் பேருந்து நிறுத்தத்தில் இருந்த இன்னும் சிலரும் கூட பார்க்கத்தான் செய்திருப்பார்கள் ?!
அதெல்லாம் சும்மா டைப் ஆசாமிகளாக இருக்கலாம்!
ஜாலி சைட் ஜல்லிகளாகவும் இருக்கலாம்!
என்னைப் போல அவள் ஒவ்வொரு அசைவையும் யாரேனும் பார்த்தார்களோ என்னவோ ?வாய்ப்பு இல்லை என்று தான் நினைக்கிறேன். அவளது கண்களை விட்டு என்னால் அகலவே முடியவில்லை.நான் அவளைத்தான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் என்பதை அவள் உணர்ந்தது போலவே தெரியவில்லை.
நீண்ட நேரமாக நின்று கொண்டே இருக்கிறாள் அவள்.நானும் தான்.அவள் ஏற வேண்டிய பேருந்து இன்னும் வரக் காணோம்.அப்போது நேரம் மாலை 4.30 pm .இன்னும் 2 மணி நேரம் போனாலும் பரவாயில்லை அவளை ஏற்றிச் செல்லும் பேருந்து மட்டும் வரக் கூடாது இப்போதைக்கு என்று நினைத்துக் கொண்டேன்.
நினைத்த மாத்திரத்தில் உடனே ஒரு பேருந்து வந்தது .
அதுவே அவள் செல்லும் பேருந்து .
ஒயிலாக ஏறிக் காணாமல் போனால் என் கண் கவர்ந்த பெண் மயிலாள் .
என்ன செய்வேன் நான்?
அடுத்த பேருந்துக்கு காத்திருந்தேன் என்று கற்ப்பனை செய்யாதீர்கள்!!!எனக்கும் செல்ல வேண்டிய பேருந்து வரவே நானும் அதில் ஏறிக் கடந்தேன் .
அவ்வளவு தான் .
நீங்கள் என்ன நினைத்துக் கொண்டீர்களோ...கொள்வீர்களோ....? நடந்தது இது தான் .
இது மட்டும் தான்!!!